குடல் புழு

intestinal-worm

பூண்டு

பூண்டுக்கு மிஞ்சிய வைத்திய எதுவுமே இல்லை என்று சொல்வார்கள். வெள்ளை பூண்டை எடுத்து தோல் உரித்து வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். ஒருவர் 3 பல் மட்டுமே எடுத்துகொள்ளலாம்.

வாசனை போக பூண்டை வறுத்து காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு கடித்து பொறுமையாக மெல்லவும். பூண்டு சாறு துளிதுளியாக இறங்கினால் தான் குடல்வழியே இருக்கும் பூச்சிகளையும் வெளியே விரட்டி அடிக்கும். என்பதால் வேகமாக மென்றுவிடாமல் பூண்டு சாறும், உமிழ்நீரும் கலந்து மெதுவாக விழுங்க வேண்டும்.

சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது ஒரு பல் வறுத்து பொடியாக நறுக்கி தேனில் குழைத்து கொடுக்கலாம். தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் போதும். தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டால் குடல் பூச்சிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி செய்தால் போதுமானது.

விளக்கெண்ணெய்

குடல் புழுக்களுக்கு விளக்கெண்ணெய் பட்டாலே அலர்ஜி. வீட்டு பெரியவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பேதி மாத்திரையை வாங்கி விளக்கெண்ணெயில் தோய்த்து கொடுப்பார்கள். அதே போன்று சுத்தமான விளக்கெண்ணெய் வாங்கி காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் விட்டு பொறுமையாக குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வயதுக்கேற்ப 2 முதல் 4 துளிகள் வரை சேர்க்கலாம்.

அதிகம் சேர்த்தால் குளிர்ச்சி ஆகும். அதோடு சமயங்களில் வயிற்றுபோக்கும் அதிகரித்து உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும் என்பதால் கவனம் தேவை. ஒருமுறை மட்டுமே குடிக்க வேண்டும்.

பப்பாளி

பப்பாளிக்காயை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறாக்க வேண்டும். பெரியவர்களுக்கு 20 மில்லி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கவும். பப்பாளி அதிகம் காயாக இருக்க வேண்டாம். இவை அதிக உஷ்ணத்தை கொடுத்துவிடும். இதை காலை வேளையில் குடிக்க வேண்டும்.

இரவு தூங்கும் போது ஒரு டம்ளர் பாலில் பப்பாளி விதையை ( தற்போது ஹைப்ரேட் பப்பாளி அதிகம் கிடைக்கிறது இதை பயன்படுத்த வேண்டாம்) அரைத்து அரை டீஸ்பூன் அளவு கலந்து குடிக்க வேண்டும்.பப்பாளி விதையில் இருக்கும் காரிசின் என்னும் வேதிபொருள் பூச்சிகளை வேரோடு வெளியேற்றும். தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டும் இதை குடித்தாலே போதுமானது.

கொட்டைபாக்கு

துவர்ப்பு மிக்க கொட்டை பாக்கு பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் இவை கை கண்ட மருந்து. கொட்டை பாக்கை சிறு உரலில் இட்டு இடித்து தூளாக்கி சலித்து கொள்ளவும்.தேவையான அளவுக்கு பொடி எடுத்து குழந்தைக்கு மிளகு அளவு, வளர்ந்த சிறுவர்களுக்கு புளியங்கொட்டை அளவு வரும்படி வெதுவெதுப்பான நீர் விட்டு குழைத்து உருண்டையாக்கி கொடுக்கவும். அல்லது பாலில் கலந்து கொடுக்கலாம். துவர்ப்பு சுவை குடலில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றும். தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.

வேப்பங்கொழுந்து

இது கஷாயம் போல் குடிக்கலாம். வேப்பங்கொழுந்து 5 அல்லது 6 எண்ணிக்கை வரும்படி எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். ஒரு டம்ளர் நீரை கொதிக்கவைத்து, அதனுடன் ஒரு பல் பூண்டு, ஒரு மிளகு, வேப்பங்கொழுந்து சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அரை டம்ளர் அளவு வரும் போது இறக்கவும். பிறகு மத்தால் கடைந்து நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். வேப்பிலை கஷாயம் சற்று கசப்பாக இருந்தால் சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம். வேப்பங்கொழுந்தின் கசப்பு குடல் பூச்சியை அழிக்கும். குழந்தைகள் கஷாயம் குடிக்க மறுத்தால் வேப்பங்கொழுந்துடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை போல் விழுங்கினால் பூச்சிகள் இறந்து வெளியேறும்.

ஆயுர்வேத

இஞ்சி, கருப்பு மிளகு என்னும் குருமிளகு, திப்பிலி மற்றும் தேன் ஆகியவற்றை கலந்த கலவையை 15 நாட்களுக்கு எடுத்துகொள்வதன் மூலம் குடல் புழுக்கள் குறைகிறது.

தேனுடன் துளசி இலை சாறு சேர்த்து எடுப்பதும் குடல் புழுக்களை வெளியேற்றுவதில் உதவி புரியும்.

ஓமம், குருமிளகு, பெருங்காயம், கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி, பூண்டு, மஞ்சள் போன்ற உணவு குடற்புழு நீக்கத்துக்கு சிறந்த நன்மை அளிக்கும். ஒரு வாரத்துக்கு தொடர்ந்து வெறும் வயிற்றில் சிட்டிகை உப்பு கலந்து ஓமம் சேர்த்து எடுத்துகொள்ளலாம்.

வெதுவெதுப்பான நீரை மட்டுமே குடிக்க வேண்டும். குழந்தைக்கு இளநீர் அல்லது ஓமத்தில் இந்த விடாங் உடன் மருந்து சேர்த்து கொடுக்கவும்.

தக்காளி 2 அல்லது 3 எடுத்து கருப்பு மிளகு மற்று உப்பு சேர்த்து காலை வெறும் வயிற்றில் 10 நாட்கள் வரை குடிப்பதன் மூலம் குடல் புழுக்கள் வெளியேறும்.

தினமும் இரண்டு முறை ஒரு கப் கேரட்டை சாப்பிடுவதும் குடல்வழியாக புழுக்களை வெளியேற்ற உதவும்.

மோருடன் ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் புழுக்கள் வெளியேறும்.

தேங்காயில் இருக்கும் ஆன் டி பாக்டிரியல் மற்றும் ஆண்டி வைரல் பண்புகள் உள்ளது. தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தேங்காயெண்ணெய் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஆசனவாயில் சிறிது தேங்காயெண்ணெய் வைக்கலாம்.

4 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் ஆசனவாயில் வைத்தால் அரிப்பு நீங்கும்.

சுத்திகரிக்கப்பட்ட மாவு, பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் அனைத்து சர்க்கரை வகைகளும் தவிர்க்க வேண்டும்.

மாதுளை, பச்சை பூண்டு, பீட்ரூட், பூசணி விதைகள் மற்றும் கேரட் போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் பாரம்பரியமான ஒட்டுண்ணிகளை கொல்ல பயன்படுத்தப்படுகின்றன. உணவில் நார்ச்சத்து நிறைவாக இருக்கட்டும். இது புழுக்களை அகற்ற உதவக்கூடும்.

சிறுநீர் கழித்தல் மலம் கழித்தல் போன்ற இயற்கை உந்துதல்களை அடக்கி வைக்க கூடாது.

திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது. உணவுக்கு முன்பும் பின்பும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதே போன்று இயற்கை உபாதைகளை கழித்த பிறகும் உறுப்புகளை வெற்று நீரில் சுத்தம் செய்ய வேண்டும். சமையலிலும் உடல் சுத்தத்திலும் சுகாதாரம் மிக மிக அவசியம்.

குடல் புழுக்கள் என்று ஒன்றை மட்டும் சொல்லிவிட முடியாது. பல விதமான புழுக்கள் குடலில் வசிக்கின்றன. கண்ணுக்கு தெரியாத கிருமிகள் வயிற்றுக்குள் செல்லும் போது இவை உருவாகிறது.

இதனால் வயிறு வலி, உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் பெற முடியாத நிலை உண்டாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை.

குடல் புழுக்கள் என்றால் என்ன?

குடல் புழுக்கள் ஹெல்மின்த்ஸ் எனப்படும் சிறிய உயிரினங்கள். இது அசுத்தமான மண், காய்கறிகள், தண்ணீரில் கண்ணுக்கு தெரியாமல் உள்ளன. சரியான தூய்மை./ சுகாதாரம் பராமரிக்கப்படாத போது இது குடலை அடைகிறது.

வட்டப்புழு, சவுக்குப்புழு மற்றும் கொக்கிப்புழுக்கள் அதிக பாதிப்பை உண்டாக்க கூடியவை. இந்த புழுக்கள் தங்களுக்கு தொற்று ஏற்படும் நபரின் திசுக்கள்/ இரத்தத்திலிருந்து அவற்றின் ஊட்டச்சத்தை பெறுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமடைகிறார்கள். புழுவின் வகை பொறுத்து அவர் இரத்த சோகையை எதிர்கொள்ளவும் வாய்ப்புண்டு.

குழந்தையாக இருந்தால் ஊட்டச்சத்து இல்லாமல் ஆகும். மேலும் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பின்னடைவு உண்டாகும். ஒட்டுண்ணி தாக்குதல் வயிற்று வலி, தளர்வான அசைவுகள், வாய்வு, இரத்த சோகை மற்றும் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

Tags: stomach worms intestinal