ஒற்றைத் தலைவலி

அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது. இருப்பினும் குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக்கொண்டு தலையின் மீது ஒத்தடம் தரலாம். முட்டைக்கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டி பயன்படுத்துங்கள். குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டலாம். பின் கைகளையும் கால்களையும் சுடுநீரில் விடவும். 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.

எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும். நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்தலாம்.

அசிடிட்டி பிரச்சினை இருந்தாலும் தலைவலி வரும் எனவே எலுமிச்சை சர்பத் சாப்பிட்டால் அசிடிட்டி நீங்கி தலைவலி குணமாகும். அதையும் மீறி தலைவலித்தால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் லவங்கப் பட்டையை பொடி செய்து தண்ணீரில் கலந்து நெற்றியில் பற்றுப் போடலாம். தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

தலைவலிக்கும் போது சந்தனத்தை பேஸ்ட் போல ஆக்கி நெற்றியில் பற்றுப் போடலாம். இது தலைவலியை நீக்குவதோடு கோடைகால உடல் சூட்டையும் குளிர்ச்சியாக்கும்.

தேங்காய் எண்ணெயை தலையில் ஊற்றி மசாஜ் செய்யுங்கள். இதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகி தலைவலி போய்விடும். வாசனை எண்ணெயால் தலைக்கு ஒற்றடம் தரலாம். தேய்த்தும் விடலாம்.

தலைவலி உயிர் போகுதா? சூடா ஒரு கப் டீ குடிங்க. அதில் இஞ்சி, மல்லி தட்டிப் போட்டு குடித்தால் தலைவலி காணாமல் போகும். அடிக்கடி தலைவலி தொந்தரவு ஏற்படுவதை தவிர்க்க தினமும் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். பின்னர் வெதுவெதுப்பாய் பால் அல்லது வெந்நீர் பருகலாம். தொடர்ந்து பத்து நாட்களுக்கு இதுபோல் செய்து வர தலைவலி எட்டிப்பார்க்காது.

இவை தவிர, புகை மற்றும் மது தலைவலியை தூண்டக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்த்திடுங்கள். மேலும், வெயிலில் அலைவது, காரமான உணவு வகைகளை உட்கொள்வது, வயிறு முட்ட சாப்பிடுவது, தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை கொள்வது போன்றவற்றை தவிர்த்து வந்தாலும் தலைவலி நம்மை நெருங்காது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

headache oneside head headache Migraine headache